கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தனித்திருத்தல் மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகளும் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளன. மேலும், சரக்குப் போக்குவரத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதால் விளைப் பொருள்களை விவசாயிகளின் நிலத்தில் இருந்து சந்தைக்குக் கொண்டு வருவதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பணம் செலவழித்தாலும் விரும்பிய காய்கறிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவது ஒருபுறம் உள்ளதோடு, சரக்குகள் வராததால் சந்தையில் காய்கறிகள் விலையும் தாறுமாறாக உயர்ந்தும் உள்ளன.
இந்நிலையில், ஊரடங்கால் சமையலுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்காமல் தடுமாறும் மக்களின் நிலையைக் கருதி, நாமக்கல் அருகே விவசாயி ஒருவர், சொந்த நிலத்தில் விளைந்த ஆயிரம் கிலோ சின்ன வெங்காயத்தை இலவசமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவமும் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் மதிவர்மன். அப்பா, மகன் இருவருமே விவசாயிகள். இவர்களுக்குச் சொந்தமாகப் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். சமையலில் வெங்காயத்தின் பங்கு முக்கியமானது. ஊரடங்கால் வேலையிழந்தும், வருவாயை இழந்தும் தவித்து வரும் மக்களின் நிலையை உணர்ந்த அவர்கள், தங்கள் நிலத்தில் விளைந்த ஆயிரம் கிலோ வெங்காயத்தை மக்களுக்கு இலவசமாகவே வழங்க முடிவு செய்தனர்.
அறுவடை செய்த ஆயிரம் கிலோ சின்ன வெங்காய மூட்டைகளை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) நாமக்கல்லுக்கு வந்தனர். அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வாகனத்தை நிறுத்தி வைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வீதம் சின்ன வெங்காயத்தை வழங்கினர். இலவசமாக வெங்காயம் வழங்கப்படும் தகவல் அறிந்த மக்கள், சிறிது நேரத்தில் அங்கு திரண்டனர்.
முகக்கவசம் அணிந்தும், 3 அடி தூரம் சமூக விலகலுடன் வந்தால் வெங்காயம் வழங்கப்படும் என அவர் கூற, மக்கள் வரிசையில் வந்து வெங்காயத்தை வாங்கிச்சென்றனர். இதுகுறித்து விவசாயி செல்லையா கூறுகையில், ''தற்போது சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. கிராமங்களில் மக்களுக்கு வெங்காயம் எளிதில் கிடைத்து விடுகிறது.
ஆனால், நகர்ப்புற மக்களுக்கு வெங்காயம் கிடைத்தாலும், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியது உள்ளது. வருமானமே இல்லாத இந்த நேரத்தில் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நாங்களும் உதவ வேண்டும் என்று எண்ணினோம். அதனால் எங்கள் வயலில் விளைந்த வெங்காயத்தை ஆளுக்கொரு கிலோ வீதம் ஆயிரம் பேருக்கு வழங்கினோம்,'' என்றனர்.
ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பேருக்கு சின்ன வெங்காயத்தை இலவசமாக வழங்கி முடித்தார், விவசாயி செல்லையா. வெங்காயத்தை உரிக்காமலே மக்கள் கண்களில் நீர் கசிந்ததைப் பார்க்க முடிந்தது!