Skip to main content

கரோனா அச்சத்தால் மந்தமான மாட்டுச் சந்தை!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021
Famous cattle trade slowed down by second wave of Corona

 

ஈரோட்டில் பிரபலமான கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இங்கு நடைபெறுகிற கறவை மாட்டுச் சந்தை மிகவும் புகழ்பெற்றது. இதற்காகவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாட்டு வியாபாரிகள் அதிகளவில் வந்து இங்கு மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

 

குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒவ்வொரு வாரமும் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இரண்டாவது அலையாக கரோனா தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியா முழுக்க ஏற்படும் தினசரி பாதிப்புகளில் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த இரு மாநிலங்களிலும் கரோனா வேகமாகப் பரவி வருவதால், இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த இரண்டு மாநிலத்துக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதன் காரணமாக 25 ஆம் தேதி வியாழக்கிழமை ஈரோடு கருங்கல்பாளையத்தில் கூடிய மாட்டுச் சந்தைக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில வியாபாரிகள் ஒருவர்கூட வரவில்லை.

 

பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வரமுடியவில்லை. இதன் காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது. இந்த மாட்டுச் சந்தைக்கு 400 பசுக்கள், 200 எருமை மாடுகள், 100 வளர்ப்புக் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. அதில் பசு மாடுகள் ரூபாய் 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூபாய். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைக்கும், வளர்ப்புக் கன்றுகள் ரூபாய் 10,000 முதல் 15,000 வரையும் விற்பனையானது. சந்தையில், 80 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கர்நாடக, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் வியாபாரிகள் அதிகளவில் வராததால் வியாபாரம் மந்தமாக நடந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்