![The family was shocked by the SMS that came after the mother's death](http://image.nakkheeran.in/cdn/farfuture/TY6T4mNVN1XWa_pzXVVlSWDEgw2feXnnN1jKO5KKte0/1636367224/sites/default/files/inline-images/phone-sms.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் வசித்துவருபவர் மணிகண்டன் (42). மின்சார வாரியத்தில் ஊழியராக பணி செய்துவரும் மணிகண்டனின் தாயார் விஜயா (65). கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி விஜயா முதல் தவணையாக கரோனா தடுப்பூசி போட்டுள்ளார். இதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் விஜயா இறந்துபோனார்.
இந்த நிலையில், அவரது மகன் மணிகண்டன் செல்ஃபோன் எண்ணுக்கு நேற்று முன்தினம் (06.11.2021) ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் மறைந்த அவரது தாயார் விஜயாவுக்கு கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி காலை 11 மணியளவில் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்புசி போடப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த குறுஞ்செய்தி மூலம் விஜயா 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழும் கிடைத்தது. உயிரிழந்த தனது தாயாருக்கு இரண்டாவது முறை கரோனா தடுப்பூசி போடாமலேயே போட்டதாக வந்த எஸ்எம்எஸ் தகவல் கண்டு மணிகண்டன் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.