Skip to main content

வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்பதைக்கூட கவனிக்க முடியாத செல்போன் மோகம்... டிக்டாக்கால் நடந்த விபரீதம்!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

டிக்டாக் வழியாக புகழ்பெறவும் முடியும்; சீரழியவும் முடியும் என்பதற்கு கட்டிய மனைவியை கைவிட்டு, டிக்டாக் ரசிகையுடன் ஓடிய கணவரே சமீபத்திய சாட்சி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி சுகன்யா. 2014-ல் திருமணம் முடித்த இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறது. சமீபத்தில் சுகன்யா கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அபிநவ்வை குழந்தையுடன் சந்தித்து தனது கணவர் மீது புகார் கொடுத்தார்.

 

family



"எனது கணவர் ராஜசேகர் டிக்டாக் செயலியில் சுவாரஸ்யமாக பேசி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். பாடல் பாடுவது, மிமிக்ரி செய்வது என்று பெண்களை கவர்ந்து என்னை ஒதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து முன்பு காடம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அதைத் தொடர்ந்து எனது கணவரை கண்டித்து எனது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

அதன்பின்னர் ஒருநாள் எனது கணவர் திடீரென காணாமல் போனார். விசாரித்தபோது, டிக்டாக் செயலி மூலம் பழக்கமான புதுக்கோட்டை யைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டது தெரிய வந்தது. போலீஸில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, எனது கணவரும் அந்தப் பெண்ணும் இருக்கும் வீடியோவை அறந்தாங்கி போலீஸார் எனக்கு அனுப்பி விவரம் கேட்டார்கள். எனவே, மாவட்ட எஸ்.பி. அவர்களிடம் எனது கணவரை மீட்டு சேர்த்துவைக்கும்படி புகார் கொடுத்தேன்'' என்று கண்ணீருடன் கூறினார். இதேபோலத்தான், விழுப் புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்ற இளைஞர், தன்னுடன் செல்போன் விற்பனைக் கடையில் வேலைபார்த்த பெண்ணின் நிர்வாணப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளி யிட்டதாக கைது செய்யப்பட்டார். இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். பெண்ணின் பெற்றோர் எதிர்த்ததால் காதல் முறிந்தது. ஆத்திரமடைந்த கலையரசன் இருவரும் பழகும்போது எடுத்த படத்தை வெளியிட்டார். சம்பந்தப்பட்ட பெண் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

"நவீன தகவல் தொடர்பு சாதனங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறியவர் கள் இருக்கிறார்கள். ஆனால், அவற்றை பயன்படுத்தி சீரழிகிறவர்கள் எண்ணிக்கையும், பெருகும் குற்றச்செயல்களும் வேதனை அளிக்கிறது'' என்கிறார் மாணவ-மாணவிகளுக்கு தனிப்பயிற்சி கல்லூரி நடத்தும் திட்டக்குடியைச் சேர்ந்த குமார் ஜி.

 

advisor



"எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், செல்போன் மூலம் குற்றச்செயல்கள் பெருகுவதை தடுக்க முடியவில்லை என்பது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் இருந்தே புரிகிறது. சமீபத்தில் விழுப்புரம் அருகே 4 வயது சிறுவனையும் சிறுமியையும் ஆபாச வீடியோ எடுத்த 17 வயதுச் சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது ஒரு மோசமான உதாரணம். படிக்கிற காலத்திலேயே செல்போன்களை தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் பெற்றோரும் இந்தக் குற்றச்செயல்களுக்குப் பொறுப்பாகிறார்கள். ஒருவரைப் பார்த்து இன்னொருவர் என்று கவுரவத்திற்காக செல்போன் வாங்குவது அதிகரிக்கிறது.


தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 250 மடங்கு குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் சரிபாதி அளவுக்கு பாலியல் குற்றங்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இந்தத் தகவல்களில் மாணவ- மாணவிகளும், குடும்பப் பெண்கள் ஆண்கள் என பாரபட்சமின்றி, வாட்ஸ்-ஆப், முகநூல், ட்விட்டர், டிக்டாக் போன்றவற்றில் எந்நேரமும் மூழ்கிக்கிடப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக டிக்டாக் செயலியில் தங்கள் பிள்ளைகள் வித்தியாசமாக எதையேனும் செய்தால் அதைப் பார்த்து பெற்றோரும் பெருமைப்படுகிறார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்போது செய்வதறியாமல் தவிக்கிறார்கள்'' என்கிறார் குமார் ஜி.

ஒரு பக்கம் மது போதையாலும், மறுபக்கம் ஆண்ட்ராய்டு செல்போன் மயக்கத்தாலும் பெண்பிள்ளைகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத நிலை. பல நேரங்களில் செல்போன்களை பயன்படுத்துகிற பெண்களே தங்கள் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் நிலை இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ ஆண்ட்ராய்டு போனுக்கு அடிமையாகும் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது.


தங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது, தங்கள் வீட்டுக்கு வந்திருப்போர் யார்? என்பதைக்கூட குழந்தைகள் கவனிக்க முடியாத அளவுக்கு செல்போன் மோகம் பிடித்து ஆட்டுகிறது. பொது இடங்களில் கூட எதை பற்றியும் கவலைப்படாமல் வயது வித்தியாசமின்றி மூழ்கிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. இந்தப் போக்கை மாற்ற அரசும் தன்னார்வ அமைப்புகளும் பத்திரிகைள், மீடியாக்கள் என எல்லோரும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தை அபாயகரமான விளைவுகளில் இருந்து காப்பாற்ற முடியும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இனி வரும் காலத்திலாவது பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான விழிப் புணர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.

 

 

சார்ந்த செய்திகள்