!["Even if Ashtalakshmi comes in person..."-Sellur Raju who told a new story](http://image.nakkheeran.in/cdn/farfuture/lLkEYP2VdU0IIotvEcBZpoj18Xd0gNCbNCY9Q63m6vM/1693190432/sites/default/files/inline-images/a88_0.jpg)
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டில் உணவு டன் கணக்கில் கொட்டி வீணடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் செய்திகளிலும், சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மதுரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருந்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி, சிக்கன் 65 உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள், அதிமுக மாநாட்டில் உணவு வீணடிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜு, ''ஒரு கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது, வீட்டில் காது குத்து நிகழ்ச்சி நடக்கிறது என்றால் சாம்பார், ரசம் எல்லாம் சரியாக இருக்கிறதா? சாம்பார், கூட்டு, ரசம் செய்யும் பொழுது சமையல்காரர்கள் ஏதாவது தவறு செய்து விடுகிறார்கள். அதுவா பெரிது? வருகிற அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் தியாக மனப்பான்மை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. மூன்று சமையல் கூடங்கள்; 300 கவுண்டர்களில் உணவு கொடுக்கிறோம் ஏதோ ஒரு கவுண்டரில் 10 அண்டா உணவு இப்படி ஆகிவிட்டது என்றால் குறை சொல்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்வார்கள். அப்படியே அஷ்டலட்சுமியே நேரில் வந்தாலும் அஷ்டலட்சுமிக்கு மூக்கு சரியில்ல பார்த்தியா முடி சரியில்லையே என குறை சொல்பவர்கள் எல்லா காலத்திலும் தமிழகத்தில் இருக்கிறார்கள்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் 'புரட்சித் தமிழர் பட்டம் எடப்பாடிக்கு தருவது மேடையில் ஏறிய பிறகுதான் எங்களுக்கே தெரியும் என ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லி உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''ஒரு ஊடகத்தில் மட்டும் அதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான தகவல். யாருக்கும் சொல்லாமல் எதையும் செய்ய முடியாது. புரட்சித் தமிழன் என்ற பட்டம் என்னையா பட்டம் மக்கள் கொடுப்பதுதான் பட்டம். தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லோருமே எதிர்க்கட்சி நடத்தக்கூடிய மாநாட்டில் வந்து கூடியிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் கூட லட்சக்கணக்கான பேர் வந்திருக்கிறார்கள் என்றால் பட்டத்தை பற்றி எல்லாம் கவலை இல்லை'' என்றார்.
அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணடிக்கப்பட்டதற்கு 'ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணவை பெரிதாய் காட்டுகிறார்கள்' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருந்த நிலையில், அஷ்டலட்சுமியை வைத்து புது விளக்கம் கொடுத்துள்ளார் செல்லூர் ராஜு.