ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.
சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.