ஈரோடு மாநகராட்சி, 2வது மண்டலம், 9வது வார்டுக்கு உட்பட்ட ராசாம்பாளையம், எஸ்.எஸ்.பி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை இல்லை. இந்த பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பல வருடமாக அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வீட்டுக்கு மது அருந்த வருபவர்கள் மது அருந்திவிட்டு அக்கம் பக்கம் வீட்டு வாசலில் அலங்கோலமான நிலையில் படுத்துக் கிடக்கின்றனர். சிலர் வாந்தியும் எடுக்கின்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதி மக்கள் ஏற்கனவே இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த வயதான தம்பதி வீட்டுக்கு சென்று இனி மது விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். ஆனாலும் இன்றும் அவர்கள் மது விற்பனையில் ஈடுபட்டதை தொடர்ந்து ஆத்திரமடைந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை எஸ்.பி.பி நகரில் வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பகுதி மக்கள் கூறும் போது, "நாங்கள் இங்கு 500 குடும்பங்களுடன் பல வருடமாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த மையப்பகுதியில் வயதான தம்பதியினர் பல வருடங்களாகவே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மது அருந்த வரும் குடிமகன்களால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை தினமும் சந்தித்து வருகிறோம். குறிப்பாக எங்கள் பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மது விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மனு அளித்து விட்டோம். எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக மது விற்பனையை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதனையடுத்து வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் மறியல் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடங்களாக நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அந்த வயதான தம்பதியர் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். வீட்டில் இருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அங்கிருந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.