தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் டெல்லி சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்த நிலையில், தமிழக ஆளுநரைச் சந்தித்துள்ளார்.
சந்திப்பு முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருவரும் 30 நிமிடங்கள் வரை பேசினோம். தமிழகத்தில் உள்ள ஆன்மிக உணர்வு ஆளுநருக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினார். தமிழ்நாட்டின் நன்மைக்காக எந்த அளவிற்கும் உழைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆளுநரிடம் அரசியல் பற்றியும் பேசினேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அது என்ன ஆளுநர் மாளிகையா? அரசியல் அலுவலகமா? என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 'அரசியல் பேச்சு குறித்து ஊடகங்களுக்கு பகிர முடியாது என ரஜினி கூறியிருப்பது வித்தியாசமாக உள்ளது. அதிகார வரம்பை மீறி செயல்படும் ஆளுநரை எத்தனை காலம் பொறுத்துக் கொள்ள போகிறோம்' என ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.