குட்கா, கஞ்சா விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தின் காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதிலிருந்து சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வைத்திருந்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குட்கா, கஞ்சா விற்போரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். குட்கா, கஞ்சா கடத்தல், பதுக்கல் சங்கலியை ஒழிக்க 'ஆப்ரேசன் கஞ்சா 2.0' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே போதை பெருட்கள் விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பார்சல் மூலம் போதை பொருட்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் கஞ்சா ஒழிப்பு பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தமிழக டிஜிபி, வரும் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் இந்த கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையான 'ஆப்ரேசன் கஞ்சா 2.0' திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.