கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள நயினார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 42) அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி ரம்யா மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் துரைசாமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
புத்தாண்டு தினத்தன்று கடை வியாபாரத்தின்போது மதிய நேரம் மனைவி மற்றும் பிள்ளைகளை கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு வருவதாகச் சென்ற ரமேஷ், அங்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டுக்குச் சென்ற ரமேஷ் மீண்டும் கடைக்கு வர நீண்ட நேரம் ஆனதால் அவரது மனைவி சந்தேகம் அடைந்தார். கடையில் வேலை செய்யும் ஒருவரை அனுப்பி கணவரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். ரமேஷ் குடியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து ரமேஷின் சகோதரர் செந்தாமரைக்கண்ணன் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன்., தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரமேஷ் தனது செல்போனில், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஒரு ஆடியோ பதிவிட்டு அதை தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஆடியோவில் பேசிய ரமேஷ் தனது மனைவியைக் குறிப்பிட்டு "எனக்கு வேறு வழி தெரியவில்லை தற்கொலை செய்து கொள்கிறேன். பிள்ளைகளைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அந்த பொண்ணு கிட்ட 23 லட்சம் பணம் 13 பவுன் நகை இருக்கு. மேலும் நான் கடன் வாங்கியது, கொடுத்தது எல்லாம் சீட்டு எழுதி பேக்கில் வைத்துள்ளேன். நான் கடன் வாங்கியது கூட அந்தப் பெண்ணுக்காகத் தான் வேறு யாருக்காகவும் இல்லை. இப்போது பணம் கேட்க போன நேரத்தில் குழந்தைகளைச் சொல்லி மறைமுகமாக என்னை மிரட்டுகிறார். என்னுடைய தற்கொலைக்கு அவர்தான் காரணம்..." என்று அந்த ஆடியோ பேச்சு நீண்டு செல்கிறது.
இந்த ஆடியோ தகவல் வாட்சப் குழுக்களில் பரவி கீழ்குப்பம் போலீசாருக்கும் சென்றுள்ளது. அந்த ஆடியோவில் ரமேஷ் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் நடந்தது என்ன என்பது குறித்து ரகசியமான முறையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மளிகை கடை வியாபாரி தற்கொலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டு இருப்பது நயினார்பாளையம், சின்ன சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.