மனித குலத்தை அறிவு செருக் கூட்டும் ஆயுதம் புத்தகங்கள். அப்படிப்பட்ட அந்த அறிவாயுதங்கள் கோடிக்கணக்கில் கொண்டு வந்து புத்தக திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பனிரெண்டு நாட்கள் நடத்துவது ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் வழக்கம். இது 15வது ஆண்டு.
வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி தொடங்கி 13 ந் தேதி வரை ஈரோடு வ.ஊ.சி. பூங்காவில் நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு மொத்தம் 230 ஸ்டால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க நாளில் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ எம் சரவணன் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோர் புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார்கள். தொடர்ந்து இரண்டாம் நாள் இலக்கிய அரங்கில் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், மொழிபெயர்ப்பாளர் தர்மராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை நிகழ்த்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், பத்திரிக்கையாளர் அசோகன் ஆகியோர் கற்றதை சொல்கிறேன் மற்றும் வாசிக்கலாம் யோசிக்கலாம் என்ற தலைப்புகளில் பேசுகிறார்கள்.
அடுத்து நான்காம் நாள் நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சமுதாய மாற்றத்தை சாதிக்கும் ஆற்றல் பேச்சுக்கா? அல்லது எழுத்துக்கா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர்கள் பேச உள்ளனர்.
தொடர்ந்து ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் ’அளவுக்கு மீறினால்...’ என்ற தலைப்பில் நமது நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் பேசுகிறார். அன்றைய தினம் ’தலை நிமிர் காலம்’ என்ற தலைப்பில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் பேசுகிறார்.
அடுத்து ஆறாம் நாள் நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பொன்வண்ணன் ஆழி சூழ் உலகு என்ற தலைப்பிலும், நடிகை ரோகினி உடல் மட்டும் அல்ல பெண் என்ற தலைப்புகளில் பேசுகிறார்கள். தொடர்ந்து ஏழாம் நாள் நிகழ்ச்சியில் மகளிர் எழுச்சி நிகழ்ச்சியாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ் வாய்ந்த பெண்கள் பதினைந்து பேர் தங்களது வாழ்வின் அனுபவத்தை பேசுகிறார்கள். தொடர்ந்து எட்டாம் நாள் உயிர் அல்ல உரிமை என்ற தலைப்பில் சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பேசுகிறார்கள்.
தொடர்ந்து தொல்லியில் ஆய்வாளர்கள் சுப்பராயலு ராஜன்,புலவர் செ.ராசு. ஆகியோர் கூட்டத்தில் கவுரவிக்கப்படுகிறார்கள். ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் பாரதி யார்? என்ற கேள்வியோடு இயல் இசை நடனம் கலந்த வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. இந்த நாடகத்தை திரைப்பட நடிகர் சிவக்குமார் தொடங்கிவைக்கிறார். அதன் பிறகு பத்தாம் நாள் நிகழ்ச்சியாக அறிவியலும் மானுடம் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகிறார்கள். அடுத்து பதினோராம் நிகழ்ச்சியாக பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேசுகிறார்கள். பன்னிரண்டாம் நாள் நிகழ்ச்சியை நிறைவு விழாவாக நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் மாலையில் இலக்கிய நிகழ்ச்சி நடப்பதும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக அரங்குகள் செயல்பட்டு வரும் சென்னை புத்தக கண்காட்சிக்கு அடுத்தபடியாக மிகப் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சியும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கொண்ட இந்தப் புத்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் செய்து வருகிறார். இந்த புத்தக கண்காட்சியில் ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவியர்களும் ஏராளமான பேர் தொடர்ந்து இங்கு வந்து புத்தகங்களை வாங்கி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.