சாதி வேற்றுமை இருளை உருவாக்கும் வருணாசிரமத்துக்கு எதிராகத்தான் தந்தை பெரியார், இங்கே தன் பகுத்தறிவுச் சுடரை உயர்த்திப் பிடித்தார். அவரால் சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மேலோங்கியது. ஏற்றத்தாழ்வுகள் மறைந்தன.
அந்தக் கால உணவு விடுதிகளில் சாதீய வெறியோடு தொங்கவிடப்பட்டிருந்த தீண்டாமை போர்டுகள், அவர் ஏற்றிய வெளிச்சத்தால்தான் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தன. அதேபோல் கிராமத்துத் தேநீர் கடைகளிலும் கோலோச்சிய ’இரட்டைக் குவளை’ எனும் இழிவான கலாச்சாரமும் முடிவுக்கு வந்தது. இப்படியாக நம் உணவுக் கலாசாரத்திலும் சாதீயம் ஏற்படுத்திய பிரிவினையை நம் நாகரிக சமுதாயம் முற்போக்குச் சிந்தனையோடு ஒன்றுபட்டுக் கைகோத்து நீக்கி வந்தது.
இதற்கு மாறாக, அண்மையில் வெங்காய விலை ஆகாயத்தைத் தொட்டபோது... ’நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை’ என்று தங்கள் சமூக உணவுப் பழக்கத்தைச் சுட்டுக்காட்டி, ஒட்டுமொத்த சமூகத்தினரின் கண்டணத்துக்கும் ஆளானார், மத்திய அமைச்சரான நிர்மலா சீதாராமன். அவர் தைரியமாகச் சொன்னதன் தொடர்ச்சியாக, இப்போது சாதீய உணர்வு, உணவு வகைகளின் வழியே அங்கங்கே தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது.
குறிப்பாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ’இஸ்கான்’ அமைப்பின் துணையோடு மாணவர்களுக்கு வழங்கப்படுவரும் காலை நேர சத்துணவை, பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் வழங்க முன்வந்திருக்கிறது தமிழக அரசு. இதற்கு எதிராக இப்போது திராவிட இயக்கங்களும் அதன் தலைவர்களும் குரல் எழுப்பிவருகிறார்கள். இந்த நிலையில் இலக்கிய உலகிலும் விருந்து அறிவிப்புகளில் சாதீயம் தைரியமாகத் தலைகாட்ட ஆரம்பித்து, பலரையும் அதிரவைத்திருக்கிறது.
உரத்த சிந்தனை அமைப்பு,. எழுத்துக்கு மரியாதை என்ற தலைப்பில் எழுத்தாளர் சிவசங்கரி உள்ளிடோரை அழைத்து, நாளை (23.2.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிட அரங்கில் இலக்கிய நிகழ்ச்சியை நடத்துகிறது. இதற்காக அடிக்கப்பட்ட அழைப்பிதழின் இறுதியில்... ’‘செவிக்குணவுக்குப் பிறகு ... மதியம் 12.45 வெங்காயம் பூண்டு மசலா கலப்பில்லாத மதிய உணவும் உண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது பிராமணர்கள் மட்டும் சாப்பிட வருக என்கிற மறைமுக அழைப்பாக... சாதீய வாடையை அழுத்தமாக வீசுகிறது. இதைப் பார்த்த பலரும் முகம் சுழித்து வருகிறார்கள். மீண்டும் அதே சாதீய இருளா?