கரோனா கிருமி உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்று எந்த வேறுபாடும் காட்டவில்லை. தினக்கூலி வேலை செய்தவர்கள் வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் குடும்பச் செலவுகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறார்கள்.
இதேபோல தான், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வழக்கறிஞர் ஒருவர் வயிற்றுப்பிழைப்பிற்காக தான் சிறிய வயதில் செய்த கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். பழங்குடியினரான உத்தமகுமரன் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் பெற்றோரின் கூடை முடைதல், கல் வேலை செய்து கொடுத்த பணத்திலும், தான் கூடை முடைந்தும் படித்து வழக்கறிஞரானார். இப்போது நீதிமன்றத்திற்கு செல்ல முடியாததால், தான் சிறு வயதில் கற்றுக்கொண்ட கூடை முடையும் தொழில் செய்யத் தொடங்கியுள்ளார். மேலும் தன் இன மக்களுக்காக குறிஞ்சி இன எழுச்சிக் கழகம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இது குறித்து, வழக்கறிஞர் உத்தமகுமரன் கூறும்போது, கரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எங்கள் இன மக்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது தொழில் கூடை பின்னுவதும், அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்துவதும்தான், பல வருடங்களாக நவீன இயந்திரங்களான கிரைண்டர், மிக்சி வந்த பிறகு அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்தும் வேலையும் எங்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் கூடை முடைவது மட்டுமே எங்கள் வாழ்வாதாரம். தற்போது கல் கொத்தியாவது அரிசி வாங்கலாம் என்றால் கரோனா பயத்தால் யாரும் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை.
அதனால் கூடை பின்னி, விற்று பிழைக்கலாம் என்றாலும் அதையும் விற்க முடியவில்லை. அதாவது கூடைகளை முடைந்து முன்பெல்லாம் ஒவ்வொரு சந்தையாக கொண்டு போய் விற்பனை செய்வோம், ஆனால் இப்போது சந்தை இல்லாததால் பின்னிய கூடைகளை விற்பனை செய்ய முடியவில்லை, கூடை பின்னுவதையும் எங்கள் மக்கள் விட்டுவிட்டு பசியும், பட்டினியுமாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு அந்தந்த பகுதியில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி., பொதுநல அமைப்புகள் நிவாரண உதவிகளை செய்துள்ளனர். ஆனால் எங்கள் இன மக்களுக்கு அந்த உதவிக்குகூட யாரை அணுகுவது என்ற விழிப்புணர்வு இல்லாததால் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. சட்டம் படித்த என்னால்கூட, எந்த வேலையும் இல்லாததால் குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் வயிற்றுப் பிழைப்பிற்காக ஆற்றுப்பகுதிக்கு சென்று ஈச்சங்கோரைகளை வெட்டி வந்து கூடை பின்னுகிறேன். பின்னப்பட்ட கூடைகளை விற்பனை செய்யவும் வழியில்லை, யாராவது வீடு தேடிவந்து வாங்கினால்தான் உண்டு, தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள, குறைந்த அளவே உள்ள எங்களது இன மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.