திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். குழந்தையை மீட்பதற்கு தமிழக அரசு அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி குழந்தை மீட்பு பணியை துரிதப்படுத்தியது. இருப்பினும் குழந்தை சடலமாக மீட்கப்பட்டு , பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் சுஜித்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்பதற்கு ரூபாய் 5 லட்சம் மட்டுமே செலவானது என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதுபோல் மீட்பு பணியின் போது 5,000 லிட்டர் டீசல் மட்டுமே செலவானது எனவும் கூறியுள்ளார். குழந்தையை மீட்க ரூபாய் 10 கோடி ரூபாய் செலவானதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை எனவும், இது குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.