![erode anthiyur plus two student kaviyarasu second time missing incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/MsGOjur2qUrXsvBazG33ZFpRDccSbwBICboFwRTUnrc/1682168093/sites/default/files/inline-images/01-police-art_6.jpg)
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூனாட்சி கிராமம் மூலகவுண்டன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பராஜ். இவரது மகன் கவியரசு (வயது17). இவர் 6-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். 11ஆம் வகுப்பை அந்தியூரில் உள்ள தனியார் பணியில் அவரது பெற்றோர் சேர்த்தனர். இது கவியரசுக்கு பிடிக்கவில்லை. தான் பழைய பள்ளியில் படிப்பதாக கூறினார். அதற்கு அவரது பெற்றோர் பிளஸ் 1 மட்டும் இந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு அவரை பழைய பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் கூறினர்.
இதனால் விருப்பமின்றி கவியரசு அந்த பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென கவியரசு வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ரயில் ஏறி சென்னை சென்றுவிட்டார். பின்னர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் கவியரசை அவரது பெற்றோர் மீட்டுச் சென்றனர். அதன் பின்னர் பிளஸ் 1 பொதுத்தேர்வை அவர் எழுதி முடித்தவுடன் பிளஸ் 2 சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சிறப்பு வகுப்புக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் தொடர்பு கொண்டு கேட்ட போது உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து அவரது பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.