நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் ஃபோட்டோ மாறிய மாணவி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் தேர்வில் பங்கேற்றார். மதுரை ஷெனாய் நகர் வெங்கடேஷன் தாக்கல் செய்த மனுவில், “என் மகள் சண்முக ப்ரியா, 10ஆம் வகுப்பில் 92.8 சதவீதம், பிளஸ் 2வில் 91.54 சதவீதம் மதிப்பெண் பெற்றார். நீட் தேர்விற்கு இரண்டு ஆண்டுகளாக தயாரானார். 2021 நீட் தேர்விற்கு ஆவணங்கள், கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பித்தார். ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தார். அதில் சண்முக ப்ரியாவின் படம், கையெழுத்திற்குப் பதிலாக வேறொரு மாணவர் படம், கையெழுத்து இருந்தது.
என் மகளின் பெயர், விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளன. தேசிய தேர்வு முகமைக்கு இமெயில், இணையதளம் மற்றும் ஃபோனில் தொடர்பு கொண்டு சரியான ஹால் டிக்கெட் வழங்குமாறு கோரினார். நடவடிக்கை இல்லை. ஹால் டிக்கெட்டில் வேறு மாணவர் படம் உள்ளதால், தேர்வு மையத்தில் சண்முக ப்ரியாவை அனுதிக்கமாட்டார்கள். சரியான விபரங்களுடன் என் மகளுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். மதுரை வீரபாஞ்சான் சோலைமலை பொறியியல் கல்லூரி மையத்தில் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுதாக்கல் செய்தார்.
இதை நேற்று முன்தினம் (11.09.2021) இரவு, அவசர வழக்காக நீதிபதி ஆர். சுரேஷ்குமார் விசாரித்தார். தேசிய தேர்வு முகமை மற்றும் அரசு தரப்பில் அதன் வழக்கறிஞர் முயற்சித்தும் விபரங்களைப் பெற இயலவில்லை. நீதிபதி, “மனுதாரர் மகளை தேர்வு மைய பொறுப்பாளர், தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். விசாரணை செப். 27க்கு ஒத்திவைக்கப்படுகிறது. தேசிய தேர்வு முகமை, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றார். இதையடுத்து நேற்று சண்முக ப்ரியா நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.