விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வழிவிடுமுருகன் என்பவருக்குச் சொந்தமான, ‘சென்னை உரிமம்’ பெற்ற RKVM பட்டாசு ஆலையில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று, வரும் தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. அப்போது, தரைச்சக்கரம் உற்பத்தி செய்த அறையில், மருந்து உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு, குமார், பெரிய மாடசாமி, வீரகுமார் என்ற செல்வம், முருகேசன் ஆகிய 4 பேர் பலியானார்கள். முனியாண்டி, கோபாலகிருஷ்ணன், முருகேசன், வேல்முருகன், காளியப்பன், அழகர்சாமி உள்ளிட்ட 8 பேர் காயமுற்று, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30 பேர் வேலை பார்த்த அந்தப் பட்டாசு ஆலையில், வெடிவிபத்தால் 15 அறைகள் வரை தரைமட்டமாயின. சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, போராடி தீயை அணைத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்- நத்தம்பட்டி காவல் எல்லைக்குள் வரும் அந்தப் பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரும், வருவாய்த்துறையினரும் நேரில் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
உலகமே ஆங்கிலப் புத்தாண்டை அமோகமாகக் கொண்டாடிவரும் வேளையில், வழக்கம்போல் வெடிவிபத்து சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது சிவகாசி!