ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை ஊருக்குள் புகுந்து தொழிலாளியை மிதித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மணல்மேடு அருகே உள்ள தூரம் மொக்கை என்ற கிராமம் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (44). ஆடு மேய்த்தல் மற்றும் மீன் பிடித்தல் தொழில் செய்து வந்தார். இவர் தனது தாய் தந்தையுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கனகராஜ் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தாய், தந்தையுடன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தூரம் மொக்கை கிராமத்துக்குள் புகுந்து வந்தது. அப்போது கனகராஜ் குடிசை வீட்டுக்குள் நுழைந்த யானை அங்கு தூங்கிக் கொண்டிருந்த கனகராஜ் நெஞ்சுப் பகுதியில் ஓங்கி மதித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு கனகராஜ் தாய், தந்தை திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது தங்களது மகனை யானை மிதிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அந்த யானை குடிசை விட்டு வெளியேறி அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றது. இதனால் கனகராஜன் தாய், தந்தை அதிர்ஷ்டவசமாக தப்பினர். யானை மிதித்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை மிதித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.