கள்ளக்குறிச்சி மாவட்டம் கிளியூர் அருகே சட்டவிரோதமாக காட்டில் போடப்பட்டிருந்த மின்சார வேலியை மிதித்த பூ வியாபாரி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ளது கிளியூர் கிராமம். அந்த பகுதியில் பூ வியாபாரம் என்பது மிகவும் பிரபலமானது. அந்தப்பகுதி மக்கள் திருவண்ணாமலை, திட்டக்குடி, விருத்தாச்சலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரியான சரத்குமார் விவசாய நிலத்தில் உள்ள பூக்களை பறிப்பதற்காக இன்று அதிகாலை சென்றுள்ளார்.
பூப்பறிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பூக்காட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது சரத்குமாரின் நிலத்திற்கு அருகே கிளியானந்தம் என்பவர் தன்னுடைய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தை காப்பதற்காக சட்டவிரோதமாக மின்வெலி ஒன்றை அமைத்துள்ளது தெரியவந்தது. அதில் சிக்கி சரத்குமார் உயிரிழந்து கிடந்தார். இதைப் பார்த்து சரத்குமாரின் உறவினர்கள் கதறி அழுதனர்.
திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் சரத்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேப்த பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சட்டவிரோதமாக மின்வெலி அமைத்து கிளியானந்தத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கிளியூர் பகுதியில் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.