சிதம்பரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தையல்நாயகி (68) இவர் சிதம்பரம் பகுதியில் மீன் வியாபாரம் செய்வதற்கு வெள்ளிக்கிழமை பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது அவர் பேருந்தில் பின் பக்கத்தில் அமர்ந்த சீட் கழன்று பேருந்துக்கு வெளியே விழுந்துள்ளது. இதனால் மூதாட்டிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு துடித்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு வரும் பேருந்துகள் மிகவும் பழமையான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதைப் பராமரிக்காமல் பழுதான நிலையிலே இயக்குகிறார்கள். இதனால் அடிக்கடி இதுபோன்ற விபத்து ஏற்படுகிறது. எனவே நகர்ப்புறங்களுக்கு சரியான பேருந்துகளை இயக்க வேண்டும். நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கும் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும் உயிர் ஒன்றுதான் எனவே பேருந்துகளை நகரப் பகுதிக்கு ஒரு மாதிரியாகவும், கிராமப் பகுதிக்கு ஒரு மாதிரியாகவும் இயக்கக் கூடாது. எனவே கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை நன்கு பராமரித்து இயக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர்.