![Echo of Nakkeeran news ... VAO fired for taking](http://image.nakkheeran.in/cdn/farfuture/Lu5tnOzPythBJiwlGEKWKz2FF61Cd_weHDucoCzGzK4/1611232282/sites/default/files/inline-images/FGHJTRUTR_0.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கொடிவயல் கிராமத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பாதிப்படைந்த வயலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு நிவாரணத்திற்குத் தேவையான ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசியிடம் விண்ணப்பிக்க வந்தனர். அப்போது ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.200 லஞ்சமாக பெற்றுக் கொண்டதை ஒரு இளைஞர் வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டிருந்தார்.
இதுகுறித்த செய்தியை நக்கீரன் இணையத்தில் புதன் கிழமை இரவு வெளியிட்டிருந்தோம். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகனை விசாரிக்க உத்தரவிட்டார். சார் ஆட்சியரின் விசாரணையில் வீடியோ ஆதாரத்தை வைத்து கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசியைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நக்கீரன் இணைய செய்தி மூலம் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இதேபோல அறந்தாங்கி தாலுகாவில் வேற்பனைக்காட்டுக்கு அருகில் உள்ள கிராமத்திலும் கிராம உதவியாளர் ரூ.200 லஞ்சம் பெற்று வருவதாகவும், மாவட்டத்தில் பல கிராமங்களில் இப்படி விவசாயிகளிடமே லஞ்சம் வாங்கப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.