தமிழகத்திற்காக மத்திய அரசிடம் கேட்கப்படும் நிதி ஒழுங்காகக் கொடுப்பதில்லை. பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜகவும், அதன் தலைவர்களும் பேசுவதற்கு அருகதையே கிடையாது” என்று மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “தனியார் பள்ளிகள் தாரைவாக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. 500 அரசுப் பள்ளியைத் தனியார் பள்ளிக்கு நிகராக தரம் உயர்த்துவதற்காக கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சியை தான் எடுத்துள்ளனர்.
தனியார் பள்ளிக்கு நிகரான கட்டணங்கள் அரசுப் பள்ளிகளில் மாறிவிடும் என்பது கிடையாது. அமைச்சர் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே சிறந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான். கூட்டணியில் இருப்பதால் இதைச் சொல்லவில்லை. இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறை தமிழகம் முதன்மையாக திகழ்கிறது. தமிழகத்திற்காக மத்திய அரசிடம் கேட்கப்படும் நிதி ஒழுங்காக கொடுப்பதில்லை.
மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ ரயில் வரும்போது திருச்சிக்கும் மெட்ரோ ரயில் வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். அதற்கும் காலதாமதம் ஏற்படுவதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுவதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பெண்கள் பாதுகாப்பை பற்றிப் பேசுவதற்கும் பாஜகவிற்கும், பாஜக தலைவர்களுக்கும் அருகதையே கிடையாது. பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கூட பாதுகாப்பு கிடையாது. அங்குச் சட்டம் ஒழுங்கு பாஜக கையில் தான் இருக்கிறது.
டெல்லியில் கேங்ஸ்டர் தாதாக்கள் இருக்கிறது. துப்பாக்கி சூடு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. தலைநகருக்கே பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் பாலியல் சம்பவம் நடந்தது மிகப்பெரிய தவறு. இனிமேல் அதுபோன்று தவறுகள் நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தவறு நடந்த ஐந்து மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திமுக நிர்வாகி என பொய்யாக எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றனர். அவர் எங்கேயாவது உறுப்பினர் அட்டை வைத்துள்ளார் என்ற காண்பிக்கப்பட்டுள்ளதா?
கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடந்த ஆட்சியில் இதுபோன்ற நடவடிக்கைகள் இருந்தது கிடையாது” என்றார்.