ஈரோடு மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் நேற்று கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலைக்கு பெங்களூரிலிருந்து ரசாயன மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கு வழியில் சிப்காட் வளாகத்திற்கு விரைவாக செல்வதற்காக கூகுள் மேப் வழிகாட்டியைப் பயன்படுத்தி அதன்படி லாரியை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
கடலூர் நகரில் உள்ள முதுநகர் இம்பீரியல் சாலை வழியாக வந்த அவர் ஒரு வழிச் சாலையாக உள்ள லாரன்ஸ் ரோட்டுக்கு சென்று அங்கு திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதை இருப்பதைப் பார்த்த அவர், அதற்கு மேல் செல்ல முடியாமல் லாரியை திருப்பி பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். பஸ் நிலையத்தில் காத்திருந்த மக்கள், பஸ், ஆட்டோ டிரைவர்கள் பஸ் நிலையத்துக்குள் சரக்கு லாரிக்கு என்ன வேலை என்று லாரி டிரைவரிடம் சத்தம் போட்டுள்ளனர்.
அப்போது லாரி டிரைவர் பயத்தோடு “நான் இந்த ஊருக்கு புதிதாக சரக்கு லாரி ஓட்டி வருகிறேன். கூகுள் மேப் வழிகாட்டியபடி இங்கு வந்து சிக்கிக்கொண்டதாகக்” கூறியுள்ளார். லாரி டிரைவரை பார்த்து பரிதாபப்பட்ட அவர்கள் சற்று பின்னால் சென்று பஸ் நிலையத்திற்குள் இருந்து திரும்பிச் சென்று சிதம்பரம் சாலை வழியாக சிப்காட் பகுதிக்குச் செல்லுமாறு வழிகாட்டியுள்ளனர். அதன்படி அந்த லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
பஸ் நிலையத்திற்குள் சரக்கு லாரி உள்ளே புகுந்ததைக் கண்டு பொதுமக்களும் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். இதனால் கடலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூகுள் மேப் வழிகாட்டி சில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். அதன் வழி நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் செல்பவர்கள் ஆங்காங்கே அப்பகுதி மக்களிடம் வழி கேட்டு அதன்படி செல்வார்கள். கூகுள் மேப்பால் வழி தெரியாமல் தடுமாறும் நிலையும் ஏற்படுகிறது.