சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்குப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எப்போதும் என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய, ஊக்கம் தரக்கூடிய வகையில் என்னை இயக்கிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் யார் என்று கேட்டால், மாணவர்களும், இளைஞர்களும்தான். ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற என்னுடைய தமிழ்நாட்டின் விடியலுக்கான முழக்கத்தை, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அந்த அடிப்படையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தைச் சார்ந்த சகோதரர்கள், நிர்வாகிகள் இந்தப் பேச்சுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி, அதில் மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கியிருக்கிறோம். ஆனால் என்னைக் கேட்டால், இந்த பேச்சுப் போட்டிகளின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள இளம் பேச்சாளர்களைத்தான், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு என்றுதான் நான் சொல்லுவேன். ஏனென்றால், பேச்சுக் கலை என்பது எல்லோருக்கும் எளிய வகையில் வந்துவிட முடியாது.
மேடைகளில் பேசுபவர்கள் தங்களுக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, அதற்கென ரசிகர்களை ஈர்த்தவர்கள் எத்தனையோ பேர் நம் தமிழ் மண்ணில் இருந்தார்கள்; இன்றைக்கும் இருக்கிறார்கள். பேச்சாற்றலால் நம் தமிழ் நிலம் பண்படுத்தப்பட்ட வரலாற்றை நீங்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். அதனை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். டி.எம். நாயர் அவர்களின் 'ஸ்பர்டாங்க்' உரைபோல், உங்களது உரைகள் வருங்காலங்களில் பலருக்கும் கையேடாக இருந்துவிட வேண்டும். திராவிட இயக்கம் என்பதே பேசிப் பேசி வளர்ந்த இயக்கம்; திராவிட இயக்கம் என்பதே எழுதி எழுதி வளர்ந்திருக்கக்கூடிய இயக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். பகுத்தறிவுக் கருத்துகளைப் பட்டெனச் சொல்லும் நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அவர் இந்த சமுதாயத்திற்காக என்னென்ன கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பது இதன் மூலமாக நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.
அதேபோல், உலக அரசியலையெல்லாம் தன் மயக்கும் மொழியாலேயே சொல்லி அறிவூட்டியவர் யார் என்றால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அடுக்குமொழியிலும் கனல் தெறிக்கக்கூடிய வசனங்கள் பேசி தமிழர்களுக்கு உணர்ச்சியை ஊட்டியவர் யார் என்றால், இன்றைக்கு நூற்றாண்டு விழா காணக்கூடிய நம்முடைய கலைஞர். இப்படி அவர்களை எல்லாம் வழிகாட்டிகளாகக் கொண்டு நம்முடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, டார்ப்பீடோ ஏ.பி. ஜனார்த்தனம், சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு, நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத், இனமான பேராசிரியர் அன்பழகன் இவர்களெல்லாம் இனமான உணர்வூட்டிய பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள். அது நீளமாக இருந்து கொண்டே இருக்கும். இப்படி வரலாறு போற்றும் பேச்சாளர்களை உருவாக்கித் தரும் களமாக, இந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்” எனப் பேசினார்.