திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில் கலைஞர் தனது ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக நிறுவிய நிறுவனங்களின் சாதனைகளைப் போற்றும் வகையில் ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் மலர் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (25.11.2023) தொடங்கியது. இந்த கருத்தரங்கை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், நிறுவனங்களின் நாயகர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவருமான கே.என். நேரு தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றி விழா மலரை வெளியிட்டார்.
மேலும் இந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த அரங்கில் கலைஞர் உருவாக்கிய நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் தொடர்பாக சிறப்பான புகைப்படங்கள் மற்றும் மாதிரி வடிவங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கினையும் பார்வையிட்டார். பின்னர் கருத்தரங்கினைப் பார்வையிட்டு கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கிய நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த குறும்படத்தினைப் பார்வையிட்டார்.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தொலைநோக்குச் சிந்தனையோடு கலைஞர் உருவாக்கிய 41 நிறுவனங்களும் மக்களுக்கு எத்தகைய பயனை அளிக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் நன்கு அறிந்ததே. கலைஞர் சொன்னதுபோல் திராவிட சகாப்தம் தொடரும்” எனக் குறிப்பிட்டு இது தொடர்பான காணொளி ஒன்றையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார். அதே சமயம் இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.