திருச்சி அருகே கும்பக்குடி பகுதியில் புது கட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்ததால், வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை அடைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கும்பக்குடியில் உள்ள புது கட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்தினைத் தொடர்ந்து 5 மீட்டர் நீளத்திற்கு கரை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், இந்த வாயக்கால் உடைப்பினை இன்று நேரில் பார்வையிட்டு உடைந்த கரையினை உடனடியாகச் சரி செய்திட நீர்வளத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கும்பக்குடி பகுதியில் உள்ள புது கட்டளை மேட்டு வாய்க்காலில் சிறு உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உடைப்பிலிருந்து வெளிவரக்கூடிய தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டம், பிடாரி ஏரியில் கலக்கிறது. இந்த சிறு உடைப்பு இன்று பிற்பகலுக்குள் சரி செய்யப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.