தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1ஆம் தேதியில் சூரிய வழிபாடு, அடுத்த நாள் விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. போகி பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து பதிவில், 'உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்' என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து பதிவில், 'உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் நம் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சாதி, மதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிற இச்சமத்துவப் பெருவிழாவை போற்றுவோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான #திராவிட_மாடல் அரசின் திட்டங்களால் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தில் சமத்துவமும் - ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்வோம். நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 2026-ல் 200-க்கும்' அதிகமான இடங்களில் கழக அணி வெல்ல தமிழர் திருநாளில் உறுதியேற்போம்! என தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், 'வணக்கம்.உங்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய தைத்திருநாள் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது இல்லங்களிலும் இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பொங்கி வழியட்டும். உங்களது அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ!! பொங்கல்!! பொங்கலோ!! பொங்கல்!!' என பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்டுள்ள பதிவில், ;வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம். பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும்' என பதிவிட்டுள்ளார்.
அமமுகவின் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், 'அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எத்தனையோ பேரிடர்கள், துயரங்களுக்கு மத்தியில் உலகத்திற்கே உணவளிக்கும் உன்னத பணியை இடைவிடாது மேற்கொண்டிருக்கும் உழவர்களை போற்றி வணங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும் எனக்கூறி தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
'தமிழன் என்ற இனத்திற்கு
உரித்தான விழா
பொங்கல் திருவிழா
இந்த மண்ணில் விளைந்த
கரும்பு, மஞ்சள், இஞ்சி
தமிழ் நிலத்தில் உழுது விளைவித்த நெல்
வீட்டுச் சர்க்கரையாகிய
நாட்டுச் சர்க்கரை
இவையாவும் பொங்கலின்
கச்சாப் பொருட்கள்
பொங்கலின் பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டவையல்ல
பொங்கல் என்ற திருவிழாவும் இறக்குமதி செய்யப்பட்டதன்று
எனவே
பச்சைத் தமிழ் நாட்டின்
பச்சைத் தமிழ் விழா
பொங்கல்தான்
மண், உணவு, மனிதன், மாடு என்ற
நான்கு தத்துவங்களுக்கான கூட்டுறவின் குறியீடுதான் பொங்கல்
கூடிக் கொண்டாடுங்கள்;
வாழுங்கள்: வாழ்த்துங்கள்' என பதிவிட்டுள்ளார்.