திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, உற்சவர் மற்றும் தாயார் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "திருக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பக்தர்களுக்கு தேவையான வசதியை மேற்கொள்வது குறித்து முதல்வரின் உத்தரவுக்கு ஏற்ப, திருவிழாக் காலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விவரங்களைக் கேட்டறிந்தேன். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அன்று செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை மாவட்ட ஆட்சியரின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. பகல்பத்து, இராப்பத்து உற்சவ நாட்களில் மொத்தம் 17 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக சொர்க்கவாசல் திறப்பு அன்று 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், குடிநீர் மற்றும் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 40 இடங்களில் தற்காலிகக் கழிவறைகள் உருவாக்கப்பட உள்ளது. அறநிலையத் துறையைச் சேர்ந்த 3 இணை ஆணையர்கள் கூடுதலாக இந்த விழாவில் பணி அமர்த்தப்பட உள்ளனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வின்போது பொது தரிசனத்தில் வருபவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால்தான் ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத் தாண்டி ஒரு பைசா கூட கூடுதலாக வசூல் செய்யப்பட மாட்டாது. அதில் எவ்வித விதிமீறல்களும் நடைபெறாது. கொரோனா பரவல் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் . அதுகுறித்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் முடிவெடுக்கப்படும்.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த முருகானந்தன் ஆகியோர் ஓதுவாராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இந்தப் பணியைப் பெறுவதற்கு நாங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நேர்மையான முறையில் நேர்காணல் நடத்தப்பட்டது என்றும், ஓதுவாராக பணி வழங்கிய தமிழக முதல்வருக்கும் இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் பணி ஆணை பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.