புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகிய மூன்று மீனவர்கள் கடந்த மாதம் இறுதியில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களிடமிருந்து மிரட்டி மீன்களை வாங்கிக்கொண்டு, அவர்களை அங்கிருந்து விரட்டினர். அதன்பிறகு அவர்கள் எதிர்பாராதபோது, கடற்படை ரோந்த கப்பலை அம்மீன்வர்களின் படகின்மீது போதினர். இதில் படகு உடைந்து கடலுக்குள் மூழ்கியது.
அதிலிருந்த சுகந்தன், சேவியர் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் விசைப்படகு ஓட்டுநர் ராஜ்கிரண் பலமணி நேரம் வரை மீட்கப்படவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. சில புகைப்படங்களையும் வெளியிட்டது.
இந்நிலையில், இறந்த மீனவர் ராஜ்கிரண் உடலை ஒப்படைக்கக் கோரி ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் மெய்யநாதன் மீனவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் சொன்னதோடு, தற்காலிக நிவாரணம் வழங்கினார். இந்த நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்திய சர்வதேச எல்லையில் இலங்கை அரசால் மீனவர் ராஜ்கிரன் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மீனவரின் உடலை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் இந்திய கடற்படையினர் ஒப்படைத்தனர். மீனவர் உடல் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திற்கு கொண்டுவரப்பட்டு மீனவரின் உடலுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மீனவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டது. பின்னர் மீனவர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்குப் பிறகு கோட்டைப்பட்டினம் மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது, மீனவர் ராஜ்கிரண் இறப்பில் சந்தேகம் உள்ளது. இலங்கை அரசு மீனவர் ராஜ்கிரணை பிடித்து சித்தரவதை செய்து சுட்டுக் கொன்றிருப்பதாக சந்தேகிக்கிறோம். அதனால் இந்திய அரசு இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவுசெய்து ராஜ்கிரண் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்திய அரசு செய்யத் தவறினால் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று நக்கீரனுக்கு சிறப்பு பேட்டி மூலம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனது கணவரை இலங்கை கடற்படையினர் பிடித்து, சித்திரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றிருப்பதாக சந்தேகம் இருக்கிறது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதும், தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது போல துளையும் உள்ளது. அதனால் தனது கணவரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் தன் கணவர் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை, நவம்பர் 18ஆம் தேதி (இன்று) மணமேல்குடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி இன்று (18.11.2021) ராஜ்கிரண் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அந்த உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு மறு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அரசு மருத்துவர்கள், தடயவியல் துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் இடம்பெற்றிருந்தனர். மறு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மீனவர் ராஜ்கிரண் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.