நெல்லையில் நடைபெற்றது பைந்தமிழ் மன்றம் தமிழாற்றுப் படை மற்றும் கால்டுவெல் நூல் வெளியீட்டு விழா. பாளை நூற்றாண்டு மண்டபத்தில் அதன் மன்றத் தலைவர் வைகோ முன்னிலையில் கவிஞர் வைரமுத்து தமிழுக்கு போப் கால்டுவெல் ஆற்றிய பணியினை மெச்சத் தகுந்த வகையில் புகழாரம் சூட்டினார்.
நிகழ்ச்சியில் கால்டுவெல் நூலை வைகோ வெளியிட அதனை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். ஏற்புரையாகப் பேசிய கவிஞர் வைரமுத்து..
தமிழுக்கான ஒப்பிலக்கணம் வளரச் செய்தவர் கால்டுவெல். வ.உ.சி., பூலித்தேவன், கட்டபொம்மன் புதுமைபித்தன் உள்ளிட்ட கல்வியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அறிவு ஜீவிகள் பிறந்த மண் இது. அவர்களுக்குச் சுயமரியாதை அதிகம் உண்டு. மட்டுமல்ல தாமிரபரணிக்கும் சுய மரியாதை உண்டு. காரணம் தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே மறைவதுதான் அதன் சுய மரியாதை. கால்டுவெல் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காக வந்தவர் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் தமிழின் பால் ஈர்க்கப்பட்டு தமிழ்மொழிக்குத் தொண்டு செய்தவர். செய்யுள் நடைமுறைத் தமிழை உரைநடை வடிவில் கொண்டு வந்தவர். அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் படித்து தமிழகத்தில் மறைந்த போப் கால்டுவெல்லுக்குப் பல பெயர்கள் இருந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டின் காரணமாக அவருக்கு நான் திராவிட கொலம்பஸ், என்று பெயர் சூட்டுகிறேன் என்று பெருமைபடப் புகழாரம் சூட்டினார் கவிஞர் வைரமுத்து.
முன்னதாகப் பேசிய வைகோ திருமூலர், பாரதி, பாரதிதாசன் தொல்காப்பியர் ஆற்றுப் படை என 18 ஆற்றுப்படைகள் உள்ளன. அந்த வகையில் 19 வது ஆற்றுப்படையாக காவ்டுவெல் ஆற்றுப்படை விளங்குகிறது. 1838 ஆம் ஆண்டு ஜனவரி அன்று நான்கு மாதப் பயணத்திற்கு பின்பு சென்னை வந்திறங்கிய கால்டுவெல் திருவாசகம், திருக்குறள் பைபிளை மொழிபெயர்த்தார். சென்னை, தஞ்சை, திருச்சி, நீலகிரி அனைத்துப் பகுதிகளுக்கும் நடந்தே சென்று சமுதாயப் பணியாற்றியவர் கால்டுவெல் 1841 நாசரேத் வந்த கால்டுவெல் கிணறுகள் பாடசாலைகளை அமைத்தார் பெண் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கியவர் போப் கால்டுவெல் என சிறப்புரையாற்றினார் வைகோ.