![Dr Radhakrishnan press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/3k27gCAT8MdNhRWPWKs9eC5Ul8zZfaF4jSLvbaN9nmY/1602574416/sites/default/files/inline-images/rathakrishnan_0.jpg)
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் அமைப்பதற்கான ஜப்பான் ஜைக்கா நிறுவனம் ஜனவரிக்குள் ஒப்புதல் வழங்கப்பட உள்ள நிலையில், விரைவில் எய்ம்ஸ் கட்டிடப் பணிகள் துவங்கும் என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் கரோனா மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை ஆய்வுக்குப் பின் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியின் போது, தமிழகத்தில் பெரிய மருத்துவமனைக்கு மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பண்டிகை மற்றும் மழைக்காலங்களில் ஒத்துழைப்பு தரவேண்டும். தீபாவளி பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க வேண்டும்.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
கரோனாவால் பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு 'பிம்ஸ்' நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் அமைப்பதற்கான ஜப்பான் ஜைக்கா நிறுவனம் ஜனவரிக்குள் ஒப்புதல் வழங்கப்பட உள்ள நிலையில் விரைவில் எய்ம்ஸ் கட்டிடப் பணிகள் துவங்கும் எனத் தெரிவித்தார்.