தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. அதேபோல், சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி இன்று (28/04/2021) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கல்வித்தகுதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் 29/04/2021 மற்றும் 30/04/2021 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) ஆகிய தேதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மருத்துவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 60,000, செவிலியர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,000 வழங்கப்படும். இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.