நாளை (13.08.2021) சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த 9ஆம் தேதி வெளியிட்டிருந்தார். அதில், “தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் பொதுசந்தா கடனாக ரூ. 2.63 லட்சம் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 5.24 லட்சம் கோடியாகவும், தமிழ்நாட்டின் மொத்த நிதிப் பற்றாக்குறை 92 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டதில்லை. கரோனா வருவதற்கு முந்தியே இந்த சரிவு தொடங்கிவிட்டது" என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘தமிழ்நாட்டில் அதிக சொத்து வளங்கள் இருப்பதால்தான் கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஒருகோணத்தில் பார்த்தால் இதுகூட வளர்ச்சிதானே’ என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளதாக செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ''பலமுறை கூறியுள்ளேன் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. அநாவசியமாக வாய்க்கு வந்ததை எல்லாம் உளறும் நபர். மாஃபா பாண்டியராஜனின் வரலாற்றைச் சொல்கிறேன். இதே மாஃபா பாண்டியராஜனின் 2016 கன்னிப் பேச்சின்போது எ.வ. வேலு, ‘7வது ஊதிய குழுவிற்கு நிதி ஒதுக்கியுள்ளீர்களா’ என்ற கேள்வியை அப்போதைய நிதியமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கேட்டார். அதற்கு ‘7வது ஊதிய குழுவிற்கு இன்னும் டெல்லியில் இருந்தே விதிமுறை வரவில்லை. நாங்கள் ஒரு பரிந்துரைக் குழு வைக்க வேண்டும், அதன்பிறகு தகவல் எடுக்க வேண்டும். அதன்பின்தான் ஒதுக்கமுடியும். எனவே இது பொறுப்பற்ற கேள்வி’ என ஓபிஎஸ் பதிலளித்தார். அதே கூட்டத்தில் இரண்டு மணிநேரம் கழித்து, ‘நிதி பற்றாக்குறைக்குக் காரணம் 7வது நிதிக்குழுவுக்கு ஊதியத்தை உயர்த்திவைத்திருக்கிறோம்’ என்று மாஃபா பாண்டியராஜன் சொல்கிறார். இதற்கு மேல் ஒரு உதாரணம் தேவையா அறிவில்லாத நபருக்கு. அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்'' என்றார்.