உலகையே அச்சுறுத்தும் ஒற்றைச் சொல் 'கொரோனா' முகத்திற்கு நேராக பேசக் கூட முடியாத நிலை. சீனாவின் உகான் நகரில் தொடங்கி இன்று உலக நாடுகள் முழுவதும் பரவி சுமார் 4 ஆயிரம் உயிர்களை காவு வாங்கிவிட்டது கண்ணுக்கு தெரியாத கொரானா எனும் அந்தக் கிருமி லட்சக்கணக்கானவர்களின் உடலில் நுழைந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
விமானத்தில் யாருடனோ ஒழிந்து வந்த கொரோனா இந்தியாவுக்குள்ளும் பலர் உடலுக்குள் குடிகொண்டுவிட்டது. இந்தியா முழுவதும் 60 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக சொன்னாலும் பயப்படத் தேவையில்லை என்ற ஆறுதலை சொல்லி வருகிறது அரசுகள். தமிழ்நாட்டில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டார் இது தமிழக சுகாதாரத் துறையின் சாதனை என்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். மற்றொரு பக்கம் யாருக்கு போன் செய்தாலும் கேட்கும் இருமல் சத்தம் தான் மக்களை பீதியடைய வைக்கிறது.
முன் எச்சரிக்கையாக மருந்துகள் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவில் நகராட்சி ஆணையர் (பொ) சுப்பிரமணியன் கண்காணிப்பில் கொரானா வைரஸ் அழிப்பு முயற்சியாக நகராட்சி ஊழியர்கள் 100 பேர் மருந்து தெளிப்பான்களுடன் களமிறங்கி மக்கள் கூடும் பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் மருந்து தெளிக்க தொடங்கிவிட்டனர்.
இதேபோல கிராமங்களிலும் மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் இருந்தால் நல்லது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.