மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதுரையில் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாயில் கமல்ஹாசனுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி வழியாக, தேனிக்கு வந்த கமல்ஹாசன் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்பொழுது, "உலக நாடுகளில் அரசியலில் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமையைப் போன்று மக்கள் நீதி மய்யத்தில் உரிய உரிமையும், பதவிகளும் வழங்கப்படும். தங்கையாக, அம்மாவாக, தோழியாக, மனைவியாகச் சாதித்து வரும் பெண்கள் அரசியலிலும் சாதிப்பார்கள் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கருத்து. வீட்டில் உள்ள பெண்களுக்கு இல்லத்தரசி என்ற பட்டத்தைக் கொடுத்துவிட்டு, வெளியில் வேறு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை.
தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 3.1 கோடியும், பெண் வாக்காளர்கள் 3.9 கோடியும் உள்ளனர். தமிழகத்தில் ஆட்சியில் யார் அமரலாம் என்பது பெண்கள் கையில் உள்ளது. மக்கள் நீதி மய்யத்தில் பெண்களுக்குச் சமபங்கு உண்டு. அவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும். எங்கள் கட்சியில் குறைந்தது 20 சாதனையாளர் பெண்கள் இருப்பார்கள். மற்ற கட்சிகளில் பெண்களை நுழையவிடாமல் அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். அரசியலில் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழி கொடுங்கள் நாடு முன்னேறும். ஆனால், இங்கு பார்த்தால் அப்பா எம்.எல்.ஏ, மகன் எம்பி. எப்படி இவர்கள் பெண்களுக்கு வழி கொடுப்பார்கள்.
தேனிக்கு வந்தது, பெண்களை மனம் மாற்றுவதற்காக அல்ல தமிழகத்தின் நிலையை மாற்றுவதற்காக. எங்கு கூட்டம் நடந்தாலும் கூட்டம் முடிந்த பின்பு, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கீழே கிடக்கும் அனைத்துக் குப்பைகளையும் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள். கட்சிக் கூட்டத்திலே குப்பைகளை க்ளீன் செய்யும் நாங்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்வோம். மக்கள் நீதி மய்யத்தின் குடும்பம் பெரியது. அந்த நம்பிக்கையில் விடைபெறுகிறேன்" என்று கூறினார்.