தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் மகளிர் உரிமை தொகைக்கான ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் 500 பேருக்கு மகளிர் உரிமை தொகைக்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்துப் பேசுகையில், “இந்தியாவே திரும்பி பார்க்கும் முன்னோடி திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டு பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு. பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் முக்கியமானது. பெண்கள் சுதந்திரமாக செயல்பட அரசியல் பேச வேண்டும். பெண்கள் படிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “ஆண்களும், பெண்களும் சமம் என மகளிருக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர். அவரின் நூற்றாண்டில் அவரது பெயரிலான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 மகளிருக்கு டெபிட் கார்டுகளை இன்று வழங்கி வாழ்த்தினோம். உழைக்கும் மகளிருக்கான உதவித் தொகையாக இல்லாமல் உரிமைத் தொகையாக செயல்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயன்களையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து உரையாற்றினோம். மகளிர் நலனைப் பாதுகாக்க திமுக அரசு என்றும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.