Skip to main content

பேரூராட்சி பெண் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

DMK councilors stage a dharna protest against the woman president of the municipality

 

சின்னாளபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தை ஒத்தி வைத்த பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபாவை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வாசல் முன்பு தரையில் அமர்ந்து இரண்டு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி தலைவரின் கணவர் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா மற்றும் துணைத் தலைவர் ஆனந்தி உட்பட 18 வார்டுகளிலும் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா தலைமையில் நடைபெற்ற 9 கூட்டங்களிலும் தொடர்ந்து பிரச்சனைகள், தர்ணா போராட்டம், வெளி நடப்பு, வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு சாலையில் அமர்ந்து போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை திமுக வார்டு உறுப்பினர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். 18 வார்டு உறுப்பினர்களில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 7 வார்டு உறுப்பினர்கள் தலைவருக்கு ஆதரவாகவும் வேல்விழி, ஜெயகிருஷ்ணன், செல்வகுமாரி, ஹேமா, லட்சுமி, காமாட்சி, ராஜாத்தி, ராசு, செல்வி, தாமரைச்செல்வி 11 திமுக வார்டு உறுப்பினர்கள் எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

 

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு செய்திருந்தனர். காலை 10.45 மணியளவில் திமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள மரத்தடியில் காத்திருந்தனர். பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா, 9வது வார்டு திமுக உறுப்பினர் சுப்பிரமணி, 4வது வார்டு உறுப்பினர் சங்கரேஸ்வரி, 13வது வார்டு உறுப்பினர் சாந்தி ஆகியோர் மட்டும் கூட்ட அறையில் அமர்ந்திருந்தனர். 11.20 மணி வரை மற்ற வார்டு உறுப்பினர்கள் வராததால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு கூட்ட அறையை விட்டு வெளியேறினார். 20 நிமிடம் கழித்து பேரூராட்சி மன்ற கூட்ட அறைக்கு வந்த வேல்விழி, ஜெயகிருஷ்ணன், செல்வகுமாரி, ஹேமா, லட்சுமி, காமாட்சி, ராஜாத்தி, ராசு, செல்வி, தாமரைச்செல்வி மற்றும் ரவிக்குமார் உட்பட்ட வார்டு உறுப்பினர்கள் கூட்ட அறைக்குச் சென்று அமர்ந்த பின்பு 10 நிமிடம் கழித்து பேரூராட்சி மன்ற அலுவலக வாசல் முன்பு அமர்ந்து கூட்டத்தை ஒத்தி வைத்ததைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

NN

 

செயல் அலுவலர் நந்தகுமார் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது திமுக வார்டு உறுப்பினர்கள் 10 பேரும் தலைவர் பிரதீபா எங்களை மதிப்பதில்லை. அவருடைய கணவர் கனகராஜின் செயல்பாடு அதிகரித்து வருகிறது. அனைத்து வேலைகளிலும் முன்னின்று தான் செய்வதுபோல் போட்டோ எடுத்து காண்பிக்கிறார். பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபாவா? கனகராஜா என்று எங்களுக்கு தெரிய வேண்டும். தலைவரின் கணவர் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிட்டால் நாங்கள் எங்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என்றனர். அதன்பின்னர் தலைவர் அறைக்குச் சென்ற செயல் அலுவலர் நந்தகுமார் தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோது 10 கவுன்சிலர்களும் திட்டமிட்டு தொடர்ந்து கூட்டத்தைப் புறக்கணிப்பது, வெளிநடப்பு செய்வது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நான் தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வர முடியாது என்றார்.

 

அதன்பின்னர் திமுக நகர செயலாளர் மோகன், பொருளாளர் எஸ்.ஆர்.முருகன், முன்னாள் நகர செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணியைச் சேர்ந்த ராஜகணேஷ், ஒன்றிய பிரதிநிதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தர்ணா போராட்டத்தை கைவிடச் செய்தனர். அப்போது பேசிய திமுக வார்டு உறுப்பினர்கள் திருப்பூரில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெண் உள்ளாட்சி பிரதிகளின் செயல்பாட்டில் அவரது கணவர் தலையிடக்கூடாது; பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் சின்னாளபட்டியில் தொடர்ந்து 9 மாதங்களாக பேரூராட்சி மன்றத் தலைவியின் கணவர் கனகராஜ் தலையீடு அதிகரித்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் நாங்கள் 10 பேரும் ராஜினாமா செய்வோம் எனக் கூறியதோடு புதிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் என கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக கட்சி நிர்வாகிகள் ஒன்றியம் மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் எனக் கூறியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக வார்டு உறுப்பினர்கள் 10 பேரும் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்