புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் இன்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர்,
" பணமதிப்பிழப்பு என்ற கொள்கையால் மத்திய அரசு ஏற்படுத்திய திட்டம் மூலம் பல பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இந்த நாட்டில் அடிப்படை திட்டங்களில் 2% வளர்ச்சி குறைந்து உள்ளது.
சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் மூலம் மதசார்பற்ற அணிகள் ஒன்றிணையும். எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இருக்கும் பா.ஜ.கட்சிக்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நோக்கத்திலும் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகின்றன.
இந்த முயற்சி பலன் அடையும்.
இலங்கை நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டும். புதுச்சேரியில் ரூ.326 கோடியில் பாரதி மில், சுதேசிமில், ஏ.எப்.டி. சர்க்கரை ஆலை உட்பட கூட்டுறவு நிறுவனங்கள் புணரமைக்கப்பட உள்ளன. அதற்காகவே அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நிதி அதிகாரம் வழங்கும் கோப்புகளை சரியான முறையில் அனுப்புவது இல்லை. மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிதி வழங்க முடியாமல் முட்டுக்கட்டை போடும் நிலையில், இந்த அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார். அதேசமயம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு வராத அளவில், எங்கள் அரசு பாதுகாத்து வருகின்றது.
ஜிப்மர் மருத்துவமனையில், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மையம், இதய மாற்றம் செய்யும் சிகிச்சை மையம் சேதராப்பட்டு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.1200 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. புதுச்சேரியில் மருத்துவம் படித்த மாணவர்கள் 50 பேருக்கு 10 ஆண்டுகளுக்குள் தேர்வு எழுத அனுமதி வழங்க உள்ளோம்" என்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் எம்.எல்.ஏ பதவி பறிபோன தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
"தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்து உள்ள நிலையில் அங்கு ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க வேட்பாளர் நின்று தோல்வியுற்றதால் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட ஆதரவளித்து, தி.மு.க கட்சி வேட்பாளர் வெற்றி அடைய பாடுபடுவோம்" என்றார்.