![ram mohan](http://image.nakkheeran.in/cdn/farfuture/3W8J6Mohydr370nSryZuLfv4RGuCg4MjQMFbZnDykK8/1533347674/sites/default/files/inline-images/ram%20mohan%20sm.jpg)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காவிரி விவகாரம் குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆலோசித்தார் என முன்னாள் முதன்மைச் செயலர் ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தவர்களிடம், சசிகலா தரப்பு வழக்குரைஞர் கடந்த 3 நாட்களாக குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில், முன்னாள் முதன்மைச் செயலர் ராம மோகன ராவிடம் இன்று சசிகலாவின் வழக்குரைஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ், காவிரி விவகாரம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, படுக்கையில் இருந்தவாறு, 2016 செப்டம்பர் 27ம் தேதி மருத்துவமனையில் 2 மணி நேரம் எங்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த வழக்கை எப்படி வாதிடுவது, அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.
2016ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெளிநாடு கூட்டிச் செல்வது குறித்து ஆலோசித்தாலும் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது என விசாரணையில் அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.