Skip to main content

'ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர வேண்டும்''- மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

District Collectors Conference ... Chief Minister's advice for the second day!

 

தமிழக முதல்வர் தலைமையில் மார்ச் 10 முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு சார்பில் கடந்த 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இது தொடர்பான அறிவிப்பில், மார்ச் 10முதல் 12ஆம் தேதி வரை என மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்ட ஒழுங்கு, வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை ஆட்சியர்கள் மூலம் அறிந்து திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டை அறிந்து கொள்வதற்கும், அவற்றைச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்த இந்த மாநாடு வழிகோலும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத்தொடர்ந்து நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை எஸ்.பிக்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று நடந்த கூட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையில் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், உடனுக்குடன்  நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை  மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 'மத நல்லிணக்கத்திற்கு எதிராகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அனைவரும் நேர்மையுடனும், வெளிப்படையாக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

 

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக முதல்வர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், அனைத்துத்துறை செயலாளர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இன்று மாலை காவல் கண்காணிப்பாளர்கள், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.

 

இன்று இந்த மாநாட்டின் தொடக்க உரையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''எங்களுக்கும் உங்களுக்கும்... அதாவது எங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர வேண்டும். அதுதான்  சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு. புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் இருந்தால் அதனை நீங்கள் இங்கே கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கிறது. அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை உரங்கள் அதிகமாக இருக்கலாம். அவற்றை எப்படி மார்க்கெட் பண்ணுவது, எப்படி அரசுக்கு வருமானத்தைப் பெருக்குவது குறித்தும் இங்கு நீங்கள் தெரிவிக்கலாம். நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் ஆலோசனைகளை இங்கே சுதந்திரமாகக் கூறலாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்