![tn](http://image.nakkheeran.in/cdn/farfuture/gDTi7tjlk-nOrweqhkoX3AVHpIlVRmXDuTgWWlop_0Q/1672376481/sites/default/files/inline-images/n222773.jpg)
அண்மையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த பொங்கல் தொகுப்பு அறிவிப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரையுடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல், அரசியல் கட்சிகள் சார்பிலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு கரும்புடன் பச்சரிசி, சர்க்கரை உடன் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் அறிவிக்கப்பட்ட ரொக்கம் ரூபாய் ஆயிரம் ஆகியவை மக்களைச் சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'பொங்கல் தொகுப்பை உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டிய முழுப்பொறுப்பும் ஆட்சியர்களையே சாரும்; பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் விநியோகமானது ஒன்பதாம் தேதிக்குப் பின் தொடங்கப்பட வேண்டும்; பொங்கல் பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்வதோடு, அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்; பொங்கல் பொருட்களை விநியோகிக்க வசதியாக வரும் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நியாயவிலை கடைகள் செயல்படும்' என சுற்றறிக்கை வாயிலாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.