திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டம், சின்னாளப்பட்டி அருகில் மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த கர்நாடக பாணியிலான அடுக்குநிலை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் முனைவர் மு.லட்சுமணமூர்த்தி, சின்னாளப்பட்டி அருகில் மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, அக்கோயிலின் பின்புறம் 9 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்ட ஒரு தூணில் அதன் 4 பக்கங்களிலும் சிறிய சிற்பங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார். இதை ஆய்வு செய்ததில், இது ஒரு அடுக்குநிலை நடுகல் என்பது கண்டறியப்பட்டது.
இதுபற்றி உதவி பேராசிரியர் முனைவர் மு. லட்சுமணமூர்த்தி கூறியதாவது, “தூணில் கீழே ஊன்றுவதற்கு 2 அடி போக மீதம் உள்ள 7 அடியில், ஒரு அடிக்கு ஒரு அடி என்ற அளவில் 7 பகுதியாக தூண் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 7 அடுக்குகளில் சிறிய அளவிலான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல அடுக்குகளில் நடுகல் சிற்பங்கள் அமைந்திருப்பதால் இதை அடுக்குநிலை நடுகல் என்கிறார்கள். இதன் ஒரு பக்கம் தரையில் புதைந்துள்ளது. எனவே அதில் உள்ள சிற்பங்களை அறிய முடியவில்லை. மீதமுள்ள 3 பக்கங்களில் உள்ள சிற்பங்களை ஆய்வு செய்ததில் இது கர்நாடக மாநிலத்தில் உள்ள அடுக்குநிலை நடுகல் போன்ற அமைப்பில் காணப்படுவதை அறியமுடிகிறது.
பல்லக்கில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு, கவரி வீசும் பணி ஆட்கள், லிங்கத்தை வணங்கும் காளை உடலுடைய முனிவர், குதிரை மீது அமர்ந்துள்ள வீரன், பசுவிடம் பால் குடிக்கும் கன்று, இருபுறமும் இரு மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் ஆகியவை குறிப்பிடத்தக்க சிற்பங்கள் ஆகும். மேலும், வீரர்கள் தங்கள் மனைவியருடன் இருக்கும் சிற்பங்கள் அதிகளவில் உள்ளன.
குழுவின் தலைவன் பல்லக்கில் அமர்ந்துள்ளான். இருவர் அதைத் தூக்கிச் செல்கிறார்கள். ஒருவர் கவரி வீசுகிறார். குதிரையில் அமர்ந்த நிலையில் மூவரும், வாள் மற்றும் ஈட்டியுடன் 9 பேருமாக இதில் 12 வீரர்கள் இருப்பதை அறிய முடிகிறது. இதன் மூன்று பக்கங்களில் மொத்தம் 26 பெண்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பேர் கையை மேலே உயர்த்தியும், இருவர் கையில் குழந்தையுடனும், நால்வர் சாதாரணமாகவும் காட்சியளிக்கிறார்கள். சிற்பங்களில் ஒரு பசுவும் கன்றும், 4 மாடுகளும், 3 குதிரைகளும் காட்டப்பட்டுள்ளன. சிற்பங்களைச் சுற்றி கொடி, பூச்சரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. வீரர்கள் இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்துள்ளனர். நடுகல்லின் மேற்பகுதி கூடு போன்று அமைந்துள்ளது.
இது போன்ற அடுக்குநிலை நடுகற்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் அமைப்பைக் கொண்டு மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தில் இரு குழுக்கள் அல்லது ஊர்களுக்கிடையில் நடந்த பூசலின்போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் உடன்கட்டை ஏறிய அவர்களின் மனைவியர் நினைவைப் போற்றும் வகையில் இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இதை கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்” என்று கூறினார்.