Skip to main content

மனைவியுடனான கருத்து வேறுபாடு... விஷமருந்தியபடி வீடியோ வெளியிட்ட கணவன்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Disagreement with wife, Husband released video

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுபிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் மோகன்ராஜ். இவரும் பணிக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த எஸ்டர் சந்தியா என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மோகன்ராஜ், எஸ்டர் சந்தியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில், எஸ்டர் சந்தியா நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், காதல் மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் சோகத்தில் கடந்த 20-ஆம் தேதி மோகன்ராஜ் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இத்தகவல் அறிந்த மோகன்ராஜ் உறவினர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

இதுகுறித்து காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மோகன்ராஜ் தன் காதல் மனைவியைப் பற்றி பேசியபடி,  கண்ணீர் மல்க பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்