வாக்குச்சாவடி மையங்களில் முறையாக வாக்குகளை எண்ண வேண்டும் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களுக்கு டிசம்பர்- 27 மற்றும் டிசம்பர்- 30 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜனவரி- 2 ஆம் தேதி திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம் உட்பட 13 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வேட்பாளர்கள், முகவர்கள் விரும்பினால் வாக்கு எண்ணிக்கையை எந்தெந்த வேட்பாளருக்கு எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை குறித்துக் கொள்ளலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தூது விட்டு தங்களுக்கு வேண்டப்பட்ட ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினருக்கு சலுகை காட்ட பேரம் பேசி வருவதாக தகவல் கூறுகின்றன. இந்த நிலையில், அதிரடியாக தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினருமான ஐ.பெரியசாமி தலைமையில் தி.மு.க. சட்டமன்ற கொறடா சக்கரபாணி, கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த, தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எல்லா வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு சுற்றின் போதும் எண்ணப்படும் வாக்குகளின் எண்ணிக்கையும் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன், அந்த இடத்திலேயே வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த முறை போல் தாமதமாக வழங்குவதோ, மறுநாள் வழங்குவதோ கூடாது என்றார். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் இரா.தண்டபாணி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாணார்பட்டி கே.விஜயன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, திண்டுக்கல் பேரூர் கழக செயலாளர் ராஜப்பா, வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளர் ஜெயன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் காமாட்சி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிலால் உசேன் மற்றும் மணலூர் மணிகண்டன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.