
2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்திருந்தது. முன்னதாக பாகிஸ்தானில் சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்த போட்டிகள் இலங்கை மற்றும் துபாய் போன்ற நாடுகளில் நடைபெற்றது. அந்த வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை மற்றும் துபாயில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, துபாயில் நேஷனல் மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு பணிகளைச் செய்ய மறுத்ததற்காக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானம் மற்றும் நியமிக்கப்பட்ட ஹோட்டல்களுக்கு இடையில் பயணிக்கும் கிரிக்கெட் அணிகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த பணியை செய்ய மறுத்து வருகை தரவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட போலீசார்களை பணிநீக்கம் செய்து பாகிஸ்தானின் பஞ்சாப் ஐஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறையினர் நீண்ட பணி நேரம் காரணமாக அதிக சுமையை உணர்ந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது என்று தகவலும் உலா வந்தது. நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே சாம்பியன்ஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.