ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யக்கூடாது என மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை நாம் தொடர்புகொண்டபோது....
தமிழக அரசு ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்கவில்லை என்றால்?
தமிழக அரசு நினைத்தால் இன்றே கூட அமைச்சரவையை கூட்டி விடுதலை செய்கிறோம் என்கிற தீர்மானத்தை எடுக்கலாம். சட்டம் அதைத்தான் சொல்கிறது. உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது. நேற்றுவரை உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டிக்கொண்டிருந்தார்கள் . இனி அப்படி செய்ய முடியாது. அதையும் மீறினால் அதற்கான விளைவுகளை அரசு சந்திக்கும்.
மத்திய பாஜக அரசாங்கத்தின் எடுபிடி அரசாக அதிமுக அரசு உள்ள நிலையில் உச்சநீதிமன்றமத்தின் இந்த தீர்ப்பை செயல்படுத்துவார்கள் என நினைக்கிறீர்களா?
அம்மாவின் அரசு அம்மாவின் ஆட்சி எனக்கூறிக்கொள்ளும் எடப்பாடி அரசு இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்தவர்களாகிவிடுவர். அதோடு செயல்படுத்தவில்லை என்றால் மத்திய பாசிசி பாஜக அரசுக்கு அடிமையாகத்தான் உள்ளோம் என்பதை அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்தது போல் ஆகிவிடும் என்பது போல் இருக்கும்.
தமிழக அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி கவர்னர் அதை ஏற்கவில்லை என்றால் உங்களது நிலைப்பாடு என்ன?
மரண தண்டனைக்கு எதிரான அமைப்பும் தமிழக வாழ்வுரிமை கட்சியோடு இணைந்து செயல்படும் 150 தமிழ் அமைப்புகளும் இணைந்து கவர்னருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் என நினைக்கிறோம். அமைச்சரவை ஒரு தீர்மானத்தை ஏற்றி அனுப்பினால் அதை கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்ட விதிமுறை அதை மீறினால் நாங்கள் போராடுவோம்.