
த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (26.02.2025) காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வானது மதியம் 01:30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சுமார் அக்கட்சியின் சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 பேர் என்ற அளவில் சுமார் 2500 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், “வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு கெட் அவுட் (#GetOut)” என விழா நடைபெறும் இடத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு பேனரில், ‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை திணிப்பிற்கு எதிராகப் போராட உறுதியேற்போம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேனரில் அக்கட்சியின் தலைவர் விஜய் கையெழுத்திட்டு த.வெ.க. சார்பில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். விழா மேடையில் இருந்த அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் விஜயைத் தொடர்ந்து கையெழுத்திட்டனர். இந்த விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது. மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என ஒரு உண்மையைக் கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னைச் சூழ்ந்தன. அப்போது விஜயிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உங்களுடைய கொள்கையைத் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து துவங்குங்ங்கள் என்று சொன்னார். நான் ஏன் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்தேன் என்கிற பதிவை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். சிறு வயதில் புரட்சியாளர் அம்பேத்கரிடமும் தந்தை பெரியார் இடமும் இணைக்கப்பட்டவன். நான் அந்த கொள்கை வழியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணி செய்து அனுபவம் இருக்கிறேன்.
ஆனால் என்னுடைய ஒரே கேள்வி என்னவென்றால் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தம் பேசக்கூடிய இந்த எழுபது வருட அரசியலில் எப்பொழுதும் புரட்சியாளர் அம்பேத்கரை மேடை ஏற்றியது கிடையாது. இரு பெரும் தலைவர்கள் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தில் ஐம்பெரும் கொள்கை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னுடைய சினிமா என்ற உச்சபட்ச ஒரு பொறுப்பையும் துறந்து இந்த கொள்கை வழியில் நடக்க வேண்டும் புதிய அரசியல் உருவாக்க வேண்டும் என விஜயுடன் சேர்ந்து உரையாடிய போது எந்த அளவிற்குக் கொள்கை ரீதியில் தன்னை உள்வாங்கி உள்ளார் என்கிற புரிதலோடு என்னைத் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டேன்.
விஜய் கூறியது போல பெரியாரிசம் பேசுவார்கள், சமூக சீர்திருத்தம் என்று அரசியலைப் பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண் ஆட்சியாக முக்கிய கொள்கையாக உருவாக்கியுள்ளனர். பெரியாரையும் சமூக சீர்திருத்தத்தையும் சேர்த்து இன்றைய அரசியல்வாதிகளான போலி கபடதாரிகள், ஊழல்வாதிகள் கைகளில் இருந்து கொண்டிருக்கிறது. இதனைத் துடைத்தெறிய வேண்டும். த.வெ.க. என்ற ஒரே கட்சி மட்டுமே பெரியாரையும் அம்பேத்கரையும் இணைத்து சமூக சீர்திருத்தத்தை உருவாக்கக்கூடிய ஒரு இயக்கமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. 1925ஆம் ஆண்டு காலகட்டத்தில் நீதிக்கட்சியின் மூலம் எல்லோரும் சமம் என்ற கருத்தியலை உருவாக்கப்பட்டு தந்தை பெரியாரின் சாதனைகளையும் சேர்த்து, அண்ணா உருவாக்கிய எல்லாரும் சமம் என்ற அரசியல் 1949 உருவாக்கப்பட்டு இன்றோடு 70 வருடங்கள் ஆகின்றன. ஆனால் பெரியார் கண்ட கனவு, அண்ணா கண்ட கனவு, அம்பேத்கர் கண்ட கனவுகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை” எனப் பேசினார்.