Skip to main content

இ.பி.எஸ். வழக்கை திரும்பப் பெற்றேனா? - ஆர்.எஸ். பாரதி பதிலடி

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

 Did EPS case withdraw? RS Bharti reminded
கோப்புப் படம் 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, முதலமைச்சர் காணொளி வாயிலாக வெளியிட்ட அறிக்கை உள்ளிட்டவை குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரு காணொளி வாயிலாகப் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்ட கூட்டம் எடப்பாடி கூட்டம்; இது ஆறுமுகசாமி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு தலைவர் மருத்துவமனையில் இருக்கும் போது ஒன்றரை கோடிக்கு இட்லி, தோசை சாப்பிடும் கூட்டம் திமுக கிடையாது. தொண்டனுக்கு ஒரு இழுக்கு ஏற்பட்டாலும் பதறிச் சென்று பார்ப்பவர் எங்கள் தலைவர். எடப்பாடி ஏதோ அவர் மீது போடப்பட்ட வழக்கை நான் வாபஸ் பெற்றேன் என்று வடிகட்டிய பொய்யை சொல்லியிருக்கிறார். அவருக்கு வரலாறும், சட்டமும் தெரியாது. வரலாற்றை நான் சொல்ல விரும்புகிறேன். 

 

“இவர் எப்படி முதல்வராக இருந்தார்?” - ஆர்.எஸ். பாரதி 
 

 

அவரது தலைவர் ஜெயலலிதா மீது டான்ஸி வழக்கை நான் தான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். இந்த வழக்கிற்கு தடை கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றம் சென்று, அங்கு அது தள்ளுபடி செய்யப்பட்டு பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்றார். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு அதே வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க மாற்றி அரசு உத்தரவிட்டது. இதில் (டான்ஸி நில வழக்கு), நான் போட்ட வழக்கும் அப்படியே இருக்கிறது. அரசு போட்ட வழக்கும் நிலுவையில் இருக்கிறது. அப்போது ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில், ‘ஏற்கனவே ஆர்.எஸ். பாரதி என் மீது வழக்கு போட்டிருக்கிறார். தற்போது அரசு தரப்பில் இருந்து ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. ஒரே குற்றத்திற்காக இரண்டு வழக்கு போடக்கூடாது’ என மனுத் தாக்கல் செய்தார்.

 

அப்போது தான் நான், என் வழக்கை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். அதே சமயம் இந்த வழக்கில் தீர்ப்புக்கு பிறகு நான் மேல்முறையீடு செல்ல அனுமதி தரவேண்டும் எனும் நிபந்தனையுடன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வழக்கை திரும்பப் பெற்றேன். பிறகு அவர் உயர் நீதிமன்றத்தில் விடுதலையானவுடன் நான் நிபந்தனையுடன் திரும்பப் பெற்ற வழக்கால் தான் அவர் மீது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிந்தது. அதன்பிறகு தான் அவர் அந்த நிலத்தை திரும்ப ஒப்படைப்பதாக சரண்டர் ஆனார். இதேபோல் தான் எடப்பாடி மீது ரூ. 4000 கோடி ஊழல் வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அதனை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது முதலமைச்சராக எடப்பாடி இருந்தார். அவர் உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என வழக்கில் தடை வாங்கினார்.

 

மீண்டும் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது நான் சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் என்று ஒப்புக்கொண்டேன். தற்போது மாநில காவல்துறை விசாரணையை துவங்கியுள்ளது. இதை அப்படியே உல்டாவாக நான் ஏதோ பயந்து திரும்ப பெற்றதுபோல் சொல்லியிருக்கிறார். திமுகவினருக்கு பயம் என்றதே கிடையாது என எடப்பாடிக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மீது சொன்ன அத்தனை குற்றச்சாட்டுகளையும் திமுக நிரூபித்து காட்டியுள்ளது; அனைவரும் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். எடப்பாடி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் மீது விசாரணை துவங்கியுள்ளது. உங்கள் தலைவருக்கு ஏற்பட்ட தண்டனை போலவே உங்களுக்கும் ஏற்படும்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்