நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேலம் உள்ளிட்ட பலப்பகுதிகளில் தேர்தல் முடிவுகளை அதிமுக தரப்பு வெளியிட விடாமல் தடுப்பதாகவும், பல இடங்களில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில் வெற்றிபெற்ற இடங்களில் திமுகவின் வெற்றி அறிவிக்கப்படாமல் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று தேர்தல் ஆணையரிடம் புகாரளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் போடி உள்ளிட்ட பல இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. பல இடங்களில் திமுக வெற்றிபெற்றும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது. பூதலூர் ஒன்றியத்தில் திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளை விரட்டியடித்துவிட்டு அதிமுகவினரை மட்டும் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதிகாரிகள், காவல்துறையினரின் துணையோடு திட்டமிட்டு சதி செய்து வெற்றியை தடுக்க முயற்சி நடைபெற்று வருகிறது. விளாத்திகுளத்தில் மூன்று வாக்குப்பெட்டிகளை காணவில்லை. இதற்கு கண்டிப்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் முறையிட ஏற்பாடுகள் செய்துவருகிறோம்.
இப்பொழுதும் சொல்வார்கள் தோல்வி பயம் காரணமாக திமுக நீதிமன்றம் செல்கிறது என்று. ஆனால் அவர்கள் எங்கள் வெற்றியை தடுக்கிறார்கள் எனவே நாங்கள் நீதிமன்றம் செல்கிறோம். தேர்தலை நடத்தினால் முறையாக நடத்த வேண்டும் ஆனால் இவர்கள் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று முன்னரே அறிந்துதான் நீதிமன்றம் சென்றோம் என்றார்.
இந்நிலையில் தற்போது திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கை அவசர விசாரணை செய்ய முடியாது. வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.