கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவி சங்கர்-நந்தினி தம்பதியினர். இவர்களுக்கு ரவி கிருஷ்ணா என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். அண்மையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக ரவி கிருஷ்ணா அவருடைய தோழர்களுடன் சேர்ந்து கொண்டு பேரூர் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு சென்றுள்ளார். அடுத்த நாள் காலை காரில் தன் நண்பர்களுடன் ரவி கிருஷ்ணா திரும்பிக் கொண்டிருந்த நிலையில், தென்னமநல்லூர் என்ற இடத்தில் அருகே அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதில் ரவி கிருஷ்ணா மற்றும் அவருடன் பயணித்த இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் மூழ்கிய காரை வெளியே எடுத்து அதிலிருந்த சடலங்களையும் மீட்டனர். மகனின் சடலத்தை பார்த்த சஞ்சீவ்-நந்தினி தம்பதியினர் கதறி அழுதனர். இருந்த ஒரே ஒரு மகனையும் இழந்துவிட்ட சோகம் அவர்களை விட்டு வைக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் எவ்வளவு ஆறுதல் கூறினாலும் மனதை தேற்றிக் கொள்ள முடியாத நிலையில் தம்பதிகள் இருந்தனர்.
மகனை இழந்த சோகத்தில் தனது தங்கை இருப்பதை அறிந்து நந்தினியின் சகோதரர் அடிக்கடி அவர்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்லி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நந்தினியை தொடர்பு கொண்ட பொழுது போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நந்தினியின் சகோதரர் உடனடியாக தங்கையின் வீட்டுக்குச் சென்ற நிலையில் அவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. காரணம் வீட்டில் அவருடைய தங்கையும் அவரது கணவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இறுதியில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மகனை இழந்த சோகத்தால் பெற்றோர்கள் உயிரை விட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.